திங்கள், 5 ஜனவரி, 2009

மறக்க இயலாதது

வீட்டாலே ஓடுதலால் அகதியானோம்
வீதிகளில் படுத்துறங்கும் மிருகம் ஆனோம்
காட் காட்டி மா சீனி அரிசி பெறவும்
கால் கடுக்கும் கியூ அமைத்த மனிதரானோம்

மழையினிலே நனைந்து கடும் காய்ச்சல் பெற்றோம்
மறைவிடத்தில் மலங்கழித்துப் பேதியுற்றோம்
குழை தழையே மருந்தாகக் கொண்டோம்- வாழ்வில்
கூற்றுவனைப் போர்க்கழைத்த வீரரானோம்

இடைநடுவில் சண்டைகளில் உயிரை விட்டோம்
இறந்தவரின் செய்தியிலே பெயரைப் பெற்றோம்
அடைமழையாய்க் குண்டுகளும் பொழிய உடலின்
அவயவங்கள் போரினிற்கு விலையாய் விற்றோம்.

மரங்களது நிழல்களிலே கல்வி கற்றோம்
மண்ணிருந்து மடியெழுதும் தன்மையுற்றோம்
உறங்குகையழல் வெடிகேட்டு ஓடும்போதும்
ஒரு கரத்தில் புத்தகத்தை ஒற்றிக்கொண்டோம்

பெரும்பாலும் வெறுந்தரையில் படுத்தபோது
மேனியது மண்மீது காதல் கொண்டு
இரும்பான இதயத்தை இளக வைக்கும்
இனிச் சொல்லும் எம்மண்ணை மறக்கலாமோ??

திங்கள், 25 ஆகஸ்ட், 2008

இணைந்த துருவங்கள்

குயில்கள் அழகாகப் பாடினாலும்
கறுப்பானவை.
கிளிகள் அழகானவை
ஆனால் அவை
வாயைத்திறந்தாலோ எனக்கு
வாந்தி வரும்
கடவுளே
எனக்கு
குயில்போல் பாடும்
கிளி வேண்டும்.

தூக்கசுந்தரி!

சொக்க எறிந்திடும் சுழல்விழியாள்-ஒளி
சுற்றி வளர்ந்திடும் கயல்விழியாள்
பக்கமாகவே வந்தமர்ந்;தாள்-எனைப்
பார்த்து முறுவலைப் பூத்திருந்தாள்.

எங்கையோ கண்டதுபோலிருந்தும்-அது
எந்தன் நினைவுக்கு எட்டவில்லை!
முந்தைப் பிறப்பதன் தொடர்பதுவோ?-இல்லை
மூளும் கனலது வேறெதுவோ??

எட்டி இடைதொடக் கரந்துடிக்கும்-அது
இல்லை முறையென மனந்தடுக்கும்
கட்டிப் பிடித்தவள் கன்னங்களில் -சிறு
காயப்படுத்தினால் சே ..வலிக்கும்.

பெயரைக் கேட்பதில் பிழையில்லையே-கழுத்துப்
பென்ரனும் இனிசியல் சொல்லுகுதே
அயரைப் போலெந்தன் நாவதுவும் -மேல்
அண்ணத்தில் ஒட்டியே காய்ந்ததுவே

எழும்பு நீ என்றெனை உலுக்கியவன்-அட
ஏழரை ஆச்சுது என்று சொன்னான்
அரும்பு மீசையின் காலத்திலே -கனவு
ஆக்கினை கூடவே| என்றான் நண்பன்!

வியாழன், 21 ஆகஸ்ட், 2008

தமிழன் வாழ்வு

ஷெல்லடிக்க ஓடுகிற வாழ்க்கை- பின்னர்
சேருகின்ற அகதி முகாம் சேர்க்கை
பல்குழல்கள் சீறிவர பாரதிரக் குண்டுவிழ
கல்வியது பாழாகிப் போகும்- கண்கள்
காண முன்னர் உடல் விழுந்து சாகும்

வளைய மாட்டன் என்று சொல்லும் பனைகள் - அதன்
வட்டுக்களை சீவும் எறிகணைகள்
வட்டிழந்து போயுமென்ன குற்றுயிராய் ஆயுமென்ன
மொட்டைமரம் வானத்தினைப் பார்க்கும்- தலை
முளைத்து வரும் வடலியினைக் காக்கும்

ஆடுதுலாத் தண்ணியள்ளும் தங்கை- அவள்
ஆயுதத்தில் கையை வைத்தாள் பங்கை
ஓடுகின்ற கள்ளளினை ஒளித்துவரும் கொள்ளையனை
சூடு என்ற மந்திரத்தால் பற்றி – அவள்
சுட்டதிலே எங்களுக்கு வெற்றி!

2006

யாமறிந்த மொழிகளிலே

கந்தரின்ர கடைசிப் பெடி கனடா போயும்
கனகாலம் ஆச்சு அவன் போற வழியில்
சிங்கப்பூர் இறங்கித்தான் சில நாள் நின்று
ஸ்பெயினுக்கால் போய்ச்சேர்ந்தான் சுவிஸைத்தானே

சுவிஸ்காரன் சும்மாவா விட்டானவனை?
துடுக்கென்று திருப்பித்தான் அனுப்பப் பார்த்தான்
தவிக்கின்ற முயற்பாய்ச்சல் பாய்ந்த பெடியன்
தடமாறி யேர்மனிலை தலையை வைத்தான்

யேர்மனிலை உழைக்கேலா தெண்டு சொல்லி
சீவனினைக் காப்பாத்த பிரான்ஸில் பூந்து
கார்வழியே மாறிப்போய் லண்டன் சேரக்
கஷ்டமென்று கனடாவில் காலை வைச்சான்

மூன்று தரம் ஓ எல் இலை கையில் வாங்கி
முழுசித்தான் பிளேன் ஏறிப் போன பெடியன்
தாண்ட இட மொழிகளெல்லாம் தானாண்க் கற்று
தலைகரணமாய்ச் சொல்லும் தகுதி கண்டான்

போனமுறை திருமணத்தை செய்யவென்று
போன பெடி வந்திறங்கி நின்ற போது
ஆனமொழி எல்லாமே அறிந்த பின்னர்
அழகு மொழி தமிழொன்றே என்றான்.

10.04.2004

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2008

இம்சை
காகிதமும் பேனையுமாக
கதிரையில் உட்கார்ந்தேன்
ஐயோ, இண்டைக்கும்
கவிதை எழுதப்போகிறாயா
கட்டிலில் புரண்டு படுத்தான்
நண்பன்.

அதிர்ஷ்டம்
யார்யாரோ எதிர்பார்த்துக்கொண்டிருக்க
கர்ப்பப் பையிலேயே உனை
தொட்டுத்தூக்கும்
பிரசவ மருத்துவன்.

நன்றிக் கடன்
நன்றி டொக்ரர் என்றபடி
கையில் திணித்தாய்
நான் என்றும் உண்ணாத
முட்டைக் கேக்.

மழலை
சின்ன முத்தத்திற்கு பதிலாக
சிறுநீர் கழித்தாய்
நீயும்
அவளைப்போல
முத்த எதிர்ப்பு முன்னணியை சேர்ந்தவளா?


பனிரோஜா
சிவப்பு ரோஜாவின்
இதழில் வெள்ளைப் பனி
குழந்தை
பால்குடிக்கிறது.




பாவஜீவன்
ஒன்றைவிட்ட ஒருநாள் oncall
செய்தே
களைத்துப்போகிறேன்
ஒவ்வொரு நாளும்
oncall செய்யும்
மன்மதன்
பாவம்!

மருந்து
வயிற்றால் போகாவிட்டால்
வாழைப்பழம் சாப்பிடலாம்
அல்லது
சரஸ்வதியில்
சாப்பிடலாம்.

புதிய பரிமாணம்.
நேற்று சோறு,
இன்று உழுந்துடன் சேர்ந்ததால்
வடை,
நாளை தோசையில் ஒரு கூறு.
மசாலாத் தோசையின்
மகத்துவம் இதுதான்.

திங்கள், 21 ஜூலை, 2008

நான் நல்ல சுகம் !

அதிகாலை ஐந்தரைக்கு அலாரம் வைத்து
அவசரமாய் குளித்துடுத்தி கும்பிட்டிட்டு
கடுகதியில் வெளிக்கிட்டு வேலைக்கோடி
கவனமுடன் பேசண்ட் ஐ கவனித்திட்டு

பசிபுகையும் வயிற்றுக்கு நீரை ஊற்ற
பக்கத்திலே உள்ள ஒரு கன்ரீன் போனால்
பிசுபிசுத்து வெடுக்கடிக்கும் கோப்பை ஒன்றில்
பீங்கானில் வெந்நீரைத் தேநீர் என்றான்

Consultant வரும்நேரம் Ward இல் நின்று
குடுகுடெனவே ஓடாடி வேலைசெய்து
விம்பிள்டன் டெனிஸ் ஆடும் வீரன் போல
விறுவிறுத்து படபடப்பு வாழ்வு நீளும்

காலையில் அவசரத்தின் வேகமெல்லாம்
கட்டறுத்து வேலைசெய்து மத்pயமாகும்
வேளையிலே Lunch இக்கு போகும்போது
வேறு ஒரு ஸ்டாம்ப் கேஸ் உம் வந்து நிற்கும்

மத்தியானச் சாப்பாட்டை மறந்து போட்டு
மாடெனவே வேலைசெய்து களைத்து, இரவு
பற்றியது தெரியாமல் பகலை முடித்து Bed இல்
படுக்கோணும் போலிருக்க , அழைப்பு வரும்!

அழைப்பு தந்த தனியாரின் கிளினிக் தன்னில்
அலுவல்களை முடித்தொதுக்கி நேரம் பார்க்க
உழைப்பு தந்த காசினிலே வாங்கி வைத்த
உடன்பிறப்பு கடிகாரம் இரவு பத்தைக் காட்டும்!

பத்துக்கு யார் கடையைத் திறந்து வைப்பான்?
பசியென்றால் நித்திரையும் கொள்ள ஏலா!
அத்தனைக்கும் முன்பு வாங்கி வைத்த நூடில்ஸ்
அதைப்போட்டு அரைவயிற்றை நிரப்பிவைப்பேன்

அதிகாலை மீண்டெழும்பி வேலைபோக
ஆயத்தம்; செய்கையிலே அம்மா போனில்
எட தம்பி சுகமோடா எனக் கேட்டா,
என்ன சொல்ல நல்லசுகம் என்று சொன்னேன்!

16.12.2006

தாங்க முடியாத சாவு!

யாரதும் உதவியின்றித் தானாக வளர்ந்த மரம்
நேர் வெயில் தாங்கிக் கீழே நிழலாக நின்ற மரம்
ஊரது வாழவென்று ஓரமாய் நின்று கீழே
தேரென இடுப்பு விரிந்து தெருக்காட்சி தந்த மரம்

இரவில் மனிதன் வந்து இவளது மறைவில் நின்று
களவிலே சிறுநீர் கழித்தும் காக்கைகள் எச்சமிட்டும்
அருகிலே குப்பையாக்கி அருவருப்புச் செய்த போதும்
பொறுமையே பதிலாய்க் கொண்டு போதியை வென்ற மரம்!

நீரினை எங்கே காண? நிலத்திலே தானே சென்று
வேரினை நீட்டி வேட்கையில் தேடியபோது
தாரது போட்டு நிரவி தடுத்தானே மனிதன் நீரை!
ஆரிடம் சொல்லி அழவோ? ஆழமாய் வேருமில்லை!

பல்லினைக் கடித்து கடித்து பார்த்தது மரமும் ஈற்றில்
மெல்லவே பொறுமை எல்லை மீறவே கோபமாகி
சள்ளெனச் சத்தமிட்டு சரிந்தது தற்கொடைத் தாக்கு
உள்ளேதான் மாட்டுப் பட்டு உடைந்தது மனிதன் பொருளே!

31.05.2006

வியாழன், 19 ஜூன், 2008

சூரியன் எப் எம் நேற்றைய காற்று 19.062008

புழுதி
மணப்பதற்காக காத்திருக்கிறது
மழையை நோக்கி
புழுதி .
.
முட்டை
பொரிக்கத்தான் போகிறது
அம்மாவிடத்திலா
அடுப்படியிலா
என்பதுமட்டும்
தெரியவில்லை.
.
இரை
உச்சி வெயிலில்
முழங்காலளவுத்
தண்ணீரில்
காத்துக் கொண்டிருக்கிறது
கொக்கு
என்னை போலவே !
.
இசை
அறியாத இராகங்களுக்கு எல்லாம்
என்னை அறியாமலே
ஆடிக்கொண்டது தலை
இரசிக்கும் போது
புரிதல் என்பது
இரண்டாம் பட்சமே !
.
கதை
யாவும் கற்பனை என்று
இறுதியில் எழுதினாலும்
நடந்ததெல்லாம் உண்மை என்பது
உனக்கும் எனக்கும் மட்டும்
தெரியும் .
.
கூடு
நான்
கொஞ்சல் கிடைக்கும் என்று நம்பிக்கொண்டிருந்த
குயில் குஞ்சு
கொத்திக் கலைகிறதே
காகம்!
.

வியாழன், 12 ஜூன், 2008

குட்டிகவிதைகள் வியாழன் 12.06.2008

சூரியன் எப் எம் நேற்றைய காற்று

தாவரம்

கண்களின் மடல்கள் அசைந்து

காட்டிக் கொடுத்து விடுகின்றன

காதல் வீசிக் கொண்டு இருப்பதனை

அசையாத தாவரங்கள் என்று

யார் சொன்னார்கள் ?

.

ஆமை

தண்ணீருக்குள் தாண்டு விடுகிறாய்

தரையில் என்றால் தலையை உள்ளே இழுக்கிறாய்

காதலுக்கு நீ காட்டுவது

புறமுதுகா?

.

நூலகம்

நீ

திருப்பிக் கொடுக்க முடியாத

இரவல் புத்தகம்

தண்டப் பணம் தவறாமல் செலுத்தும்

வாசகன் நான்!

.

வானொலி

சைக்கிளை தலை கீழாகப் போட்டு

டைனமோவில்

பாட்டு கேட்டதுபோல்ஒரு

சந்தோசம்

தெருவில் நீ போகிறாய்

.

மொழி

எத்தனை மொழிகள் எனக்கு தெரியும்

உன் கண்கள்

உதடுகள்

பின்னல் பேசும்

எத்தனை மொழிகள்

எனக்கு தெரியும் !

.

உப்பு

உப்பு விளைவது

உப்பளத்தில் மட்டுமல்ல

உன் கோபத்தால்

என் தலையணை

உறையிலும் தான்.

வியாழன் 12.06.2008

வியாழன், 5 ஜூன், 2008

நேற்றைய காற்று 05.06.2008

கடிகாரம்
எப்போவாவது பார்க்கப்படும் நேரத்திற்காக
தொடர்ந்து சுற்றிக்கொண்டிருக்கின்றன
நினைவுச் சக்கரங்கள்
.
கிணறு
படிக்கட்டால் இறங்கி
பாத்திரத்தை எடுக்கமுடியும்
ஆனாலும்
நான் குதித்தேன்
உள்ளே விழுந்தது
நீயாயிற்றே !
.
வாய்ப்பாடு
மனனம் செய்யாததால்
பேச்சு விழுந்தது எனக்கு
உன் பெயரை
மனனம் செய்ய தொடங்கியதால்
அவசரமாக நடந்தது
கலியாணப் பேச்சு
உனக்கு!
.
தீப் பெட்டி
பெட்டியின் கன்னத்தை
உரஞ்சும் போது
பற்றிக் கொள்வது
குச்சிகள் மட்டும் அல்ல!
.
வேட்டை
பதுங்கிக் கொண்டே வருகிறாய்
இனி என்ன
நான் பாய்ந்து தானே ஆகவேண்டும்!
.
வெற்றிலை
வெற்றிலை வைத்து
வரவேற்காது விட்டால் பரவாயில்லை
வெற்றிலை காவியை
துப்பாவிட்டாலே போதும் !

05.06.2008

புதன், 2 ஏப்ரல், 2008

சூரியன் எப் எம் நேற்றைய காற்று

வியாழன் 09.12.2004

உண்டியல்

நிறையட்டும்

காத்திருந்த எனக்கு

கிடைத்தது

நீ

களவாடப்பட்ட செய்தி !

எறும்பு

இனிப்பாய் இருந்தாய்

உனக்குள் விழுந்து

இறந்து போகிறேன்

தலைவலி

நீ கிடைத்தாய்

கண்ணூறு பட்டு எனக்கு

காய்ச்சலும் தலைவலியும் !

செவ்வாய், 11 மார்ச், 2008

சிறு கவிதைகள் 13.10.2005

மழை
வானம் இன்று
உன்னை போலவே
செல்லமாக
சினுங்கி கொண்டு இருக்கிறது !

காயம்
எனக்கு ஈரமான நெஞ்சு
அதனால்
மொட்டையான உன் பார்வை கூட
குற்றி விட்டது !

நடனம்
தப்பு தப்பாய்
என் மனது

தாளம் போட்டாலும்
ஜதி பிசகாமல்
நடந்து போகும்
நீ

பழைய கவிதைகள்


ஒன்று
Efficasy இல்லாத drug உம்
புசிப்பதற்கு இல்லாத உணவும் !

தாலாட்டு
Lcctures after the
lunch

SEQ
Lecture ஐ கேட்பதுடன்
நின்றுவிடாது
எனக்கும் ஒரு வரி
எழுதுங்கள் !

விளங்கேல்லை!
குழந்தைகள் பால் குடிக்குமாம்.
குமரன் எப்போது
குழந்தை ஆனான்?

கோளாறுகள்

காது கேட்காமல் போவது
வயதானவர்களுக்கு வரும் கோளாறு அல்ல
அது ஒரு வயசுக் கோளாறு

அண்ணா அன்று அவள் சொன்னது
கண்ணா என்று தான் என் காதில் விழுந்தது

விடுங்கள் என்று தளபதி சொன்னதை
சுடுங்கள் என்று சிப்பாய் கேட்டதால்
என் உயிர் பிரிந்தது
வாலிப சிப்பாயின் காதலிக்கு
அன்றுதான் கலியாணம் !

செவ்வாய், 19 பிப்ரவரி, 2008

விலை வாசி

வெற்றி கொடியை அண்ணாந்து பார்த்த போது
கழண்டு விழுந்த
காற் சட்டை !

அர்த்தம்

திரு என்ன்றல் செல்வமாம்
பிச்சை கரன் கையில்
திரு ஓடு !

இரவும் பகலும்

இரவில் கனவில் இதமாக இருக்கும் நீ

பகலில் மட்டும் ஏன்

பார்க்காமல் போகின்றாய்?

Internship

கூப்பிடு தூரத்தில் நீ
சந்திக்க முடியாத ஊரடங்கு உத்தரவுக்குள்
நான்!

திங்கள், 18 பிப்ரவரி, 2008

வாணிக்கு தந்த வணக்கம்

ஆயிரம் கோடியாய் அறிவுளோர் நீதியாய்
பேய் வரும் இரவிலே பேதியாய் சோதியாய்
தாயான ஆன எம் தாமரை நாயகி
தோயுமுன் அன்பிலே தோல்விகள் நீக்குவாய்


வாழ்விலே சாவதாய் சாவதே வாழ்வதாய்

ஊழ்வினை தலையிலே ஊழியாய் காளியாய்

பாழ் வினை நீக்கி உன் பாதமே காட்டுக

தாழ்வினை மாற்றுக, தாமதம் எனினி?

தாலாட்டு கேட்காத தொட்டில்கள்

பதுங்கு குழிக்குள் உறங்குகிறது குழந்தை
உடைந்த வீடுக்குள்
மழையில் நனைத்த படி
அதன் தொட்டில் !