திங்கள், 5 ஜனவரி, 2009

மறக்க இயலாதது

வீட்டாலே ஓடுதலால் அகதியானோம்
வீதிகளில் படுத்துறங்கும் மிருகம் ஆனோம்
காட் காட்டி மா சீனி அரிசி பெறவும்
கால் கடுக்கும் கியூ அமைத்த மனிதரானோம்

மழையினிலே நனைந்து கடும் காய்ச்சல் பெற்றோம்
மறைவிடத்தில் மலங்கழித்துப் பேதியுற்றோம்
குழை தழையே மருந்தாகக் கொண்டோம்- வாழ்வில்
கூற்றுவனைப் போர்க்கழைத்த வீரரானோம்

இடைநடுவில் சண்டைகளில் உயிரை விட்டோம்
இறந்தவரின் செய்தியிலே பெயரைப் பெற்றோம்
அடைமழையாய்க் குண்டுகளும் பொழிய உடலின்
அவயவங்கள் போரினிற்கு விலையாய் விற்றோம்.

மரங்களது நிழல்களிலே கல்வி கற்றோம்
மண்ணிருந்து மடியெழுதும் தன்மையுற்றோம்
உறங்குகையழல் வெடிகேட்டு ஓடும்போதும்
ஒரு கரத்தில் புத்தகத்தை ஒற்றிக்கொண்டோம்

பெரும்பாலும் வெறுந்தரையில் படுத்தபோது
மேனியது மண்மீது காதல் கொண்டு
இரும்பான இதயத்தை இளக வைக்கும்
இனிச் சொல்லும் எம்மண்ணை மறக்கலாமோ??

கருத்துகள் இல்லை: