வியாழன், 19 ஜூன், 2008

சூரியன் எப் எம் நேற்றைய காற்று 19.062008

புழுதி
மணப்பதற்காக காத்திருக்கிறது
மழையை நோக்கி
புழுதி .
.
முட்டை
பொரிக்கத்தான் போகிறது
அம்மாவிடத்திலா
அடுப்படியிலா
என்பதுமட்டும்
தெரியவில்லை.
.
இரை
உச்சி வெயிலில்
முழங்காலளவுத்
தண்ணீரில்
காத்துக் கொண்டிருக்கிறது
கொக்கு
என்னை போலவே !
.
இசை
அறியாத இராகங்களுக்கு எல்லாம்
என்னை அறியாமலே
ஆடிக்கொண்டது தலை
இரசிக்கும் போது
புரிதல் என்பது
இரண்டாம் பட்சமே !
.
கதை
யாவும் கற்பனை என்று
இறுதியில் எழுதினாலும்
நடந்ததெல்லாம் உண்மை என்பது
உனக்கும் எனக்கும் மட்டும்
தெரியும் .
.
கூடு
நான்
கொஞ்சல் கிடைக்கும் என்று நம்பிக்கொண்டிருந்த
குயில் குஞ்சு
கொத்திக் கலைகிறதே
காகம்!
.

வியாழன், 12 ஜூன், 2008

குட்டிகவிதைகள் வியாழன் 12.06.2008

சூரியன் எப் எம் நேற்றைய காற்று

தாவரம்

கண்களின் மடல்கள் அசைந்து

காட்டிக் கொடுத்து விடுகின்றன

காதல் வீசிக் கொண்டு இருப்பதனை

அசையாத தாவரங்கள் என்று

யார் சொன்னார்கள் ?

.

ஆமை

தண்ணீருக்குள் தாண்டு விடுகிறாய்

தரையில் என்றால் தலையை உள்ளே இழுக்கிறாய்

காதலுக்கு நீ காட்டுவது

புறமுதுகா?

.

நூலகம்

நீ

திருப்பிக் கொடுக்க முடியாத

இரவல் புத்தகம்

தண்டப் பணம் தவறாமல் செலுத்தும்

வாசகன் நான்!

.

வானொலி

சைக்கிளை தலை கீழாகப் போட்டு

டைனமோவில்

பாட்டு கேட்டதுபோல்ஒரு

சந்தோசம்

தெருவில் நீ போகிறாய்

.

மொழி

எத்தனை மொழிகள் எனக்கு தெரியும்

உன் கண்கள்

உதடுகள்

பின்னல் பேசும்

எத்தனை மொழிகள்

எனக்கு தெரியும் !

.

உப்பு

உப்பு விளைவது

உப்பளத்தில் மட்டுமல்ல

உன் கோபத்தால்

என் தலையணை

உறையிலும் தான்.

வியாழன் 12.06.2008

வியாழன், 5 ஜூன், 2008

நேற்றைய காற்று 05.06.2008

கடிகாரம்
எப்போவாவது பார்க்கப்படும் நேரத்திற்காக
தொடர்ந்து சுற்றிக்கொண்டிருக்கின்றன
நினைவுச் சக்கரங்கள்
.
கிணறு
படிக்கட்டால் இறங்கி
பாத்திரத்தை எடுக்கமுடியும்
ஆனாலும்
நான் குதித்தேன்
உள்ளே விழுந்தது
நீயாயிற்றே !
.
வாய்ப்பாடு
மனனம் செய்யாததால்
பேச்சு விழுந்தது எனக்கு
உன் பெயரை
மனனம் செய்ய தொடங்கியதால்
அவசரமாக நடந்தது
கலியாணப் பேச்சு
உனக்கு!
.
தீப் பெட்டி
பெட்டியின் கன்னத்தை
உரஞ்சும் போது
பற்றிக் கொள்வது
குச்சிகள் மட்டும் அல்ல!
.
வேட்டை
பதுங்கிக் கொண்டே வருகிறாய்
இனி என்ன
நான் பாய்ந்து தானே ஆகவேண்டும்!
.
வெற்றிலை
வெற்றிலை வைத்து
வரவேற்காது விட்டால் பரவாயில்லை
வெற்றிலை காவியை
துப்பாவிட்டாலே போதும் !

05.06.2008