திங்கள், 21 ஜூலை, 2008

நான் நல்ல சுகம் !

அதிகாலை ஐந்தரைக்கு அலாரம் வைத்து
அவசரமாய் குளித்துடுத்தி கும்பிட்டிட்டு
கடுகதியில் வெளிக்கிட்டு வேலைக்கோடி
கவனமுடன் பேசண்ட் ஐ கவனித்திட்டு

பசிபுகையும் வயிற்றுக்கு நீரை ஊற்ற
பக்கத்திலே உள்ள ஒரு கன்ரீன் போனால்
பிசுபிசுத்து வெடுக்கடிக்கும் கோப்பை ஒன்றில்
பீங்கானில் வெந்நீரைத் தேநீர் என்றான்

Consultant வரும்நேரம் Ward இல் நின்று
குடுகுடெனவே ஓடாடி வேலைசெய்து
விம்பிள்டன் டெனிஸ் ஆடும் வீரன் போல
விறுவிறுத்து படபடப்பு வாழ்வு நீளும்

காலையில் அவசரத்தின் வேகமெல்லாம்
கட்டறுத்து வேலைசெய்து மத்pயமாகும்
வேளையிலே Lunch இக்கு போகும்போது
வேறு ஒரு ஸ்டாம்ப் கேஸ் உம் வந்து நிற்கும்

மத்தியானச் சாப்பாட்டை மறந்து போட்டு
மாடெனவே வேலைசெய்து களைத்து, இரவு
பற்றியது தெரியாமல் பகலை முடித்து Bed இல்
படுக்கோணும் போலிருக்க , அழைப்பு வரும்!

அழைப்பு தந்த தனியாரின் கிளினிக் தன்னில்
அலுவல்களை முடித்தொதுக்கி நேரம் பார்க்க
உழைப்பு தந்த காசினிலே வாங்கி வைத்த
உடன்பிறப்பு கடிகாரம் இரவு பத்தைக் காட்டும்!

பத்துக்கு யார் கடையைத் திறந்து வைப்பான்?
பசியென்றால் நித்திரையும் கொள்ள ஏலா!
அத்தனைக்கும் முன்பு வாங்கி வைத்த நூடில்ஸ்
அதைப்போட்டு அரைவயிற்றை நிரப்பிவைப்பேன்

அதிகாலை மீண்டெழும்பி வேலைபோக
ஆயத்தம்; செய்கையிலே அம்மா போனில்
எட தம்பி சுகமோடா எனக் கேட்டா,
என்ன சொல்ல நல்லசுகம் என்று சொன்னேன்!

16.12.2006

தாங்க முடியாத சாவு!

யாரதும் உதவியின்றித் தானாக வளர்ந்த மரம்
நேர் வெயில் தாங்கிக் கீழே நிழலாக நின்ற மரம்
ஊரது வாழவென்று ஓரமாய் நின்று கீழே
தேரென இடுப்பு விரிந்து தெருக்காட்சி தந்த மரம்

இரவில் மனிதன் வந்து இவளது மறைவில் நின்று
களவிலே சிறுநீர் கழித்தும் காக்கைகள் எச்சமிட்டும்
அருகிலே குப்பையாக்கி அருவருப்புச் செய்த போதும்
பொறுமையே பதிலாய்க் கொண்டு போதியை வென்ற மரம்!

நீரினை எங்கே காண? நிலத்திலே தானே சென்று
வேரினை நீட்டி வேட்கையில் தேடியபோது
தாரது போட்டு நிரவி தடுத்தானே மனிதன் நீரை!
ஆரிடம் சொல்லி அழவோ? ஆழமாய் வேருமில்லை!

பல்லினைக் கடித்து கடித்து பார்த்தது மரமும் ஈற்றில்
மெல்லவே பொறுமை எல்லை மீறவே கோபமாகி
சள்ளெனச் சத்தமிட்டு சரிந்தது தற்கொடைத் தாக்கு
உள்ளேதான் மாட்டுப் பட்டு உடைந்தது மனிதன் பொருளே!

31.05.2006